×

அரசியல் தெளிவு இல்லாதவர் அண்ணாமலை: திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா

1 பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என பாஜ தேர்தல் வாக்குறுதி குறித்து உங்கள் கருத்து என்ன?  இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை என்பது இந்தியாவுக்கான தேர்தல் அறிக்கை. ஆனால் பாஜவின் தேர்தல் வாக்குறுதி இந்து ராஷ்ட்டிராவுக்கான தேர்தல் வாக்குறுதி. இந்திய மக்கள் இந்தியாவை இந்தியாவாக பார்க்க நினைக்கிறார்கள். அதனடிப்படையில், பாஜவின் தேர்தல் அறிக்கையை ஒரு பொருட்டாக நினைத்தால் தானே மக்கள் இதனை எதிர்ப்பார்கள்.

அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து விட்டன. ஆனால், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பாஜ வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் எந்தவித விவாதத்தையும் கிளப்பாது. அவர்கள் உண்மையிலேயே 10 ஆண்டுகள் சாதனை செய்திருந்தால், என்னவெல்லாம் செய்துள்ளோம் என்று இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் பாஜவுக்கு சொல்ல எதுவும் இல்லை என்பதால் மதம் மற்றும் சாதியை வைத்து பிரிவினைவாதமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கீழே தள்ளி, சிதைத்து இந்தியாவின் முகத்தை மாற்றி, மதச்சார்பின்மை என்ற அடையாளத்தை உடைக்க மோடி, அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் போதும்.

2 மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு அதிமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாரே? எடப்பாடி பழனிசாமி பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார். திமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எப்படி பெயர் சூட்டிக் கொண்டார்களோ அப்படித்தான், இவரும் செய்துகொண்டிருக்கிறார். இவர் ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது.

நாங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற எங்களுக்கு 2 ஆண்டு காலம் ஆனதற்கு அதிமுக ஏற்படுத்தி சென்ற நிதி நெருக்கடி தான் காரணம். இவர்கள் ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு, எத்தனையோ லட்சம் கோடியில் கடனை விட்டு சென்றார்கள். திமுக வந்தபின்னர் அந்த நிதி நிலையை சரி செய்து மக்களுக்கான நிதிகளை வழங்கி பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இந்த தேர்தல் முடிந்தவுடன் மேலும் 65 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகையை முதல்வர் வழங்க இருக்கிறார்.

3 புள்ளி விவரத்துடன் பாஜ அண்ணாமலை பேசுவதால் தான், அவரை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சப்படுகிறார்கள் என சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி உங்கள் பதில் என்ன? தன்னுடைய வயதான காலத்தில், வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள, தன்னுடைய மகள் மீது வந்துள்ள சம்மனை சமாளிக்க நள்ளிரவில் சென்று பாஜவில் இணைந்தவர் சரத்குமார்.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை நக்கல் செய்வதற்காக, அவர் புள்ளி விவரங்களோடு பேசுகிறார் என சரத்குமார் சொல்லி இருக்கலாம். என்னை பொறுத்தவரை அண்ணாமலை ஒரு அரைவேக்காடு தற்குறி. அரசியல் அரைவேக்காடு, அரசியல் அறிவு, தெளிவு துளியும் இல்லாமல், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுபவர். மேலும், அரசியல் தலைவர்களை மரியாதை இல்லாமல் அவர் பேசிவருகிறார்.

இதுமட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் அவர்கள் தகாத முறையில் பேசுவது, மிரட்டுவது என பல்வேறு தவறுகளை செய்கிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 பேர் புள்ளி விவரங்களோடு பேசுகிறார்கள். ஒன்று சீமான், மற்றொருவர் அண்ணாமலை. இவர்கள் இருவரும் விளம்பரத்தில் வருவதுபோல ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல.

4 இந்தியா கூட்டணிக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு எப்படி இருக்கு, திமுகவின் திட்டம் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துள்ளது? மலைகிராம மக்களுக்கு கூட மகளிர் உரிமைத்தொகை சென்றுள்ளது. இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கான உதவித் தொகை, இல்லம் தேடி மருத்துவம் என அனைத்தும் மக்களை சென்று சேர்ந்துள்ளதை என்னுடைய பரப்புரையின் வாயிலாக நான் பார்க்கிறேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லியதை தாண்டி சொல்லாததையும் செய்துகொண்டிருக்கிறார். இந்தியாவில் கட்டமைப்பு கிழக்கில் இருந்துதான் தொடங்கும். எனவே, கிழக்கு வானம் வெளுக்கப்போகிறது. இந்தியாவை மீட்டெடுப்பதற்கான துவக்க நாளும் வந்துவிட்டது.

The post அரசியல் தெளிவு இல்லாதவர் அண்ணாமலை: திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா appeared first on Dinakaran.

Tags : DMK ,joint secretary ,Tamilan Prasanna ,BJP ,India Alliance ,India ,Annamalai ,DMK News Communications ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு